×

நடிகர் கிரேஸி மோகன் மரணம்

சென்னை: நடிகரும் வசன கர்த்தாவுமான கிரேஸி மோகன் (66), மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். சென்னையை சேர்ந்த இவரது இயற்பெயர் மோகன் ரெங்காச்சாரி. 1952ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பிறந்தார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். இளம் வயது முதல் மேடை நாடகங்கள் நடத்தி வந்தார். கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் என்ற நாடகத்தை எழுதி நடித்தார். அதன் மூலம் கிரேஸி மோகன் என இவர் பெயர் பெற்றார்.
கே.பாலச்சந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை படத்துக்கு வசனம் எழுதி, சினிமாவில் தடம் பதித்தார். கமல்ஹாசனுடன் நெருங்கிய நட்பு இருந்தது. கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இவரும் நடித்தனர். வசனமும் எழுதினார். தொடர்ந்து அபூர்வ சகோதரர்கள், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் ேக சம்பந்தம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்பட கமலின் பல படங்களில் நடித்தும் வசனங்களையும் எழுதினார். கதாநாயகன், உன்னைச்சொல்லி குற்றமில்லை, சின்ன மாப்பிள்ளை, ஆஹா, ரட்சகன் உள்பட பல படங்களுக்கு கதை, வசனம் எழுதினார்.

தனது சகோதரர் மாது பாலாஜியுடன் இணைந்து பல மேடை நாடகங்களை நடத்தினார். மாது பிளஸ் 2, மேரேஜ் மேட் இன் சலூன், அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மாது மிரண்டால், காதலிக்க மட்டும் மாது உண்டு, மதில் மேல் மாது, சாக்லேட் கிருஷ்ணா உள்ளிட்ட மேடை நாடகங்கள் முக்கியமானவை. இவரின் சாக்லேட் கிருஷ்ணா நாடகம் 500 முறை மேடையேறி இருக்கிறது. வெளிநாடுகளிலும் ஏராளமான நாடகங்களை நடத்தினார். மந்தைவெளியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று பிற்பகல் 2 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவரது உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறும்போது, ‘மோகனின் நெற்றியில் கை வைத்து பிரியாவிடை கொடுத்தேன். மோகனின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும். அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன். இந்த இழப்பை அவரது குடும்பத்தார் தாங்கிக்கொள்வதற்கான மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன்’ என்றார். திரையுலகினர் பலர் கிரேஸி மோகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.

திரையுலகம், மேடை நாடக உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

கிரேஸி மோகன் மறைவு திரையுலகம், மேடை நாடக உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: திரையுலக கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றி, பல மேடை நாடகங்களை இயக்கி நடித்த கிரேஸி மோகன், உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அடிப்படையில், பொறியாளரான அவர் அனைவரையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நாடக ஆசிரியராக, கதை-வசன கர்த்தாவாக விளங்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். அவரின் மறைவு திரையுலகிற்கும், மேடை நாடக உலகத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், திரையுலக, நாடக உலக நண்பர்களுக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல மதிமுக பொது செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Crazy Mohan ,death , Actor, Crazy Mohan, Death
× RELATED முத்தரையர் 1349வது சதயவிழா: எல்.முருகன் வாழ்த்து